<p>கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த ஆழியார் - வால்பாறை சாலையில் சில்லி கொம்பன் காட்டு யானை ஒய்யாரமாக நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைராலாகி வருகிறது.</p><p>பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் ஆழியார் அணை பகுதிக்கு வரும். அந்த வகையில், இன்று காலை சில்லி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி தண்ணீர் குடிப்பதற்காக ஆழியார் - வால்பாறை சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றது.</p><p>அங்கு அங்கு வந்த வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சாலையின் குறுக்கே வராதவாறு ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். தண்ணீர் அருந்திய யானைகள் சில நிமிடங்களில் மீண்டும் ஆழியார் வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து மீண்டும் வாகனப்போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில், வனத்துறை ஊழியர்கள் சுழற்சி முறையில் காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் யானைகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
