<p>கடலூர்: பூவாணிக்குப்பம் அருகே பெருமாள் ஏரிக்கரை பகுதியில் பேருந்து மீது எதிரே வந்த வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p>கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு நேற்று தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்றது. இந்நிலையில், பெருமாள் ஏரிக்கரை பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது, குறிஞ்சிப்பாடி அருகே பூவாணிக்குப்பம் பகுதியில் இருந்து காடாம்புலியூருக்கு முந்திரிக்கொட்டை உடைக்கும் வேலைக்காக பெண்களை ஏற்றி வந்த வேன் நேருக்கு நேர் மோதியது.</p><p>இந்த விபத்தில் வேனில் இருந்த பெண்கள், ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் என 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குள்ளஞ்சாவடி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், தனியார் பேருந்தும் - வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
