<p>தூத்துக்குடி: ஏரல் வருவாய்த் துறையினர் பெண்ணிடம் 5000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறி கனிமொழி எம்பி-யிடம் பெண் ஒருவர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று வருகை தந்தார். அப்போது நாசரேத் அருகே சின்னமாடன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அர்ச்சுதக்கனி என்ற பெண் திடீரென புகார் ஒன்றை முன் வைத்தார். அதாவது ஏரல் தாலுகா அலுவலகத்தில் ஆதார் கார்டு பெயர் மாற்றம் செய்ய சென்ற போது 5000 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள் என கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். மேலும் எங்கே போனாலும் லஞ்சம் கேக்குறாங்க என அவர் கனிமொழி எம்பியிடம் தனது குமுறலை வெளிப்படுத்தினார்.</p><p>தொடர்ந்து அருகே நின்று கொண்டிருந்த மற்றொரு வட்டாட்சியர் ஒருவரை அழைத்து ஏரல் வட்டாட்சியரிடம் இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர் இளம் பகவத் உடனடியாக உத்தரவிட்டார்.</p>
