<p>தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கோயில் குளத்தில் சுற்றித் திரிந்த 5 அடி நீளமுள்ள முதலையை அப்பகுதி மக்கள் வலைவீசி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் குளத்தில், சில நாட்களுக்கு முன்னர் கொள்ளிடம் பகுதியிலிருந்து சுமார் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று தஞ்சமடைந்தது. அதனைக் கண்ட அப்பகுதி மக்கள், முதலையை பிடிக்குமாறு வனத் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அதனை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அதனால், அக்குளத்திற்கு செல்லவதை பொதுமக்கள் தவிர்த்து வந்தனர்.</p><p>இந்நிலையில், வனத்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இழந்த கல்லூர் கிராம மக்கள், குளத்தில் சுற்றித் திரிந்த முதலையை வலைவீசிப் பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்தியாளர்களிடம், முதலையை படம் எடுக்கக் கூடாது எனக் கூறி வனத் துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஊர் மக்களால் பிடிக்கப்பட்ட முதலையை மீட்ட வனத் துறையினர், அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டுச் சென்றனர்.</p>
