<p>வேலூர்: குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கில் உறுதிமொழி ஏற்பு பேரணி நடைபெற்றது.</p><p>முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று (நவ.14) நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலூர் மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கலந்து கொண்டார். அவரை, பல்வேறு வேடமணிந்த குழந்தைகள் மலர் கொடுத்து வரவேற்றனர். இதில், ஆட்சியர் கேக் வெட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.</p><p>பின்னர் பேசிய அவர், “குழந்தைகள் நம் சமூகத்தின் எதிர்காலம். அவர்களது உடல் நலம் மிக முக்கியமானது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும். தடுப்பூசிகளை தவறாது செலுத்த வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது ஒவ்வொரு குடும்பத்தினரின் பொறுப்பாகும்” என தெரிவித்தார்.</p><p>இதன் தொடர்ச்சியாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி, மாநகராட்சி மேயர் சுஜாதா, சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கொண்டனர். கல்லூரி மாணவ–மாணவிகள் பங்கேற்ற இந்த ஊர்வலம், குழந்தைகள் நலன், கல்வி, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.</p>
