<p>திருநெல்வேலி: நெல்லையப்பர் திருக்கோயில் ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.</p><p>தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்றைய தினம் விமர்சையாக நடைபெற்றது. </p><p>விழாவிற்காக பல்வேறு வண்ண மலர்களால் கோயில் ஆயிரம் கால் மண்டபம் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து காந்திமதி அம்பாள் மணக்கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினார். </p><p>மேலும், சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவமும் நடந்தது. அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணமும் விமர்சையாக நடைபெற்றது. பின்னர், சுவாடச உபச்சார மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோயில் வளாகத்தில் திருமண விருந்து அளிக்கப்பட்டது.</p>
