செங்கல்பட்டு: மாமல்லபுரம் சிற்பங்களை தனது குடும்பத்தினருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பார்த்து மகிழ்ந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் புராதன சிற்பங்களான கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட உலகப் புகழ் பெற்றவை.

இந்நிலையில், இந்த சிற்பங்களை பார்வையிடும் பொருட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று மாமல்லபுரம் வருகை தந்தார்.

முன்னதாக கடற்கரை கோவிலுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா மற்றும் காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து கடற்கரை கோவிலுக்கு சென்ற ஆளுநருக்கு கோவிலின் வரலாற்றை மூத்த சுற்றுலா வழிகாட்டி ஆனந்த் எடுத்து கூறினார். மேலும் ஐந்து ரதம் பகுதியிலும் அர்ஜுனன் தபசு பகுதியிலும் உள்ள புராதன சிற்பங்களை ரசித்துவிட்டு இறுதியாக வெண்ணெய் உருண்டை பாறை வெளியே நின்று தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

மேலும், ஆளுநர் வருகையால் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மாமல்லபுரத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.