<p>திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா இன்று சாமி தரிசனம் செய்தார்.</p><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்ற திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. இங்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் , பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வப்போது, முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் பலரும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், நேற்று நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குநருமான நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு, ஆபத்சகாய விநாயகப் பெருமான், உற்சவர் சண்முகப் பெருமான், உற்சவர் முருகப் பெருமான், மூலவர் முருகப்பெருமான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதமாக மலர் மாலை, சாமி பட்டுப்புடவை ஆகியவை வழங்கப்பட்டன.</p>
