<p>வால்பாறை: அரசுப் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானைகள் கூட்டம் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியதால் பள்ளி மாணவர்கள் அச்சம் அடைந்தனர். </p><p>வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் நேற்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம், பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து வகுப்பறையில் ஜன்னல் கதவுகளையும் ,உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள் அமரும் இருக்கைகளையும் உடைத்து புத்தகங்களை சேதப்படுத்தின.</p><p>இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் பள்ளி வளாகத்தில் இருந்து சிறிது தூரம் சென்று அந்த பகுதியில் முகாமிட்டுள்ளதால் மீண்டும் பள்ளி வளாகத்திற்குள் வர வாய்ப்புள்ளதால் அப்பகுதிவாசிகளும், பள்ளி குழந்தைகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.</p>
