<p>திருப்பூர்: கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர்.</p><p>தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த மாதத்தில் கேராளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயிலின் நடை நேற்று (நவ.16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், கார்த்திகை முதல் நாளான இன்று (நவ.17) சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். அதன்படி, திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோயிலில், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.</p><p>தொடர்ந்து, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 41 நாள்கள் மண்டல் விரதம் இருந்து இவர்கள் கோயிலுக்குச் செல்வார்கள்.</p>
