கோயம்புத்தூர்: விவசாய தோட்டத்தில் மேய்ச்சலுக்காக வளர்க்கப்பட்ட கன்றை சிறுத்தை அடித்து கொன்ற நிலையில் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே குப்பிச்சிபுதூர் விவசாய கிராமத்தில் பெருமாள் கரடு பகுதி உள்ளது. இங்குள்ள தோட்டப்பகுதிக்கு அவ்வப்போது சிறுத்தை வந்து போவதைக் கால் தடயங்கள் மூலம் அறிந்த வனத் துறையினர், தோட்டங்களில் சிறுத்தை பிடிப்பதற்காக மூன்று கூண்டுகள் வைத்தனர்.

மேலும் அப்பகுதியில் வனத் துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பாலு என்ற விவசாயிக்குச் சொந்தமான தோட்டத்திற்குள் சிறுத்தை புகுந்துள்ளது. அங்கு மேய்ச்சலுக்காக வளர்க்கப்பட்டு வந்த பசுங்கன்றை தாக்கி கொன்றுள்ளது. இருப்பினும் அங்கு வைக்கப்பட்ட கூண்டுகளில் சிக்காமல் சிறுத்தை தப்பி காட்டுக்குள் சென்று விட்டது.

இந்நிலையில் இன்று காலை பாலு விவசாய தோட்டத்துக்குச் சென்ற போது தான் வளர்த்து வந்த பசுங்கன்று குட்டி வயிற்றுப் பகுதியில் சிறுத்தையால் கடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பின், அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்து கிடந்த கன்றுக் குட்டியைக் கால்நடை மருத்துவர் பிரேதப் பரிசோதனை செய்து சிறுத்தை கடித்ததால் இறந்ததை உறுதி செய்தனர்.

மேலும், சிறுத்தை கூண்டில் சிக்காதது ஏன்? எந்த வழியாக ஊருக்குள் வந்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.