<p>திருநெல்வேலி: தெரு நாய்கள் கடித்து நான்கு ஆடுகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நெல்லை டவுன் சாலியர் தெரு பகுதியை சேர்ந்தவர் கற்குவேல். இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கமாக ஆடுகளை கட்டக் கூடிய இடத்தில் கட்டி வைத்து விட்டு இரவு உறங்க சென்றுள்ளார். அப்போது இரவில் ஆடுகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் அலறல் சத்தம் கேட்ட சூழலில் சம்பவ இடத்தில் வந்து பார்த்த போது கட்டப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் குதறியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.</p><p>உடனடியாக அங்கிருந்த நாய்களை அவர் விரட்டி உள்ளார்.நாய்கள் கடித்ததில் சம்பவ இடத்திலேயே நான்கு ஆடுகள் பலியாகின. மேலும் அங்கிருந்த ஒரு ஆடு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக கற்குவேல் அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நெல்லை மாநகரத்தில் கால்நடைகளால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு வந்த சூழலில் மாநகராட்சி நிர்வாகம் கால்நடைகளுக்கு அபராதம் விதித்து வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதே போல் தெரு நாய்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.</p>
