<p>தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.</p><p>தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 126.28 அடியாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை முழுவதுமாக எட்டி நிரம்பி வந்த நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது.</p><p>இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் நேற்று சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து 25 கன அடியாக இருந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக இன்று சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து 119 கன அடியாக அதிகரித்துள்ளது.</p><p>மேலும் அணையின் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 119 கன அடியாக உள்ள நிலையில், சோத்துப்பாறை அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்ற பட்டு வருகிறது. மேலும் அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிரம்பி வழிந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>
