திருவண்ணாமலை: தொடர் திருவிழாக்களை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்ட நிலையில் ரூ.3.47 கோடி காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இந்த கோயிலில் ஆடி கிருத்திகை, கார்த்திகை தீபத் திருவிழா உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

இதனால், ஆண்டுக்கு மூன்றிலிருந்து நான்கு முறை உண்டியல்கள் நிரம்பி வழிகின்றன. அப்போதெல்லாம் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெறுகிறது. அந்த வகையில் நவ.5 ஆம் தேதி ஐப்பசி பௌர்ணமி மற்றும் நவ.17 கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கிய நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

இதனையடுத்து கோயில் உண்டியல்கள் நிரம்பின. முன்னதாக ஜூன் மாதம் உண்டியல்களில் போடப்பட்ட காணிக்கைகள் எண்ணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் என அனைத்து உண்டியல்களின் காணிக்கைகளையும் எண்ணும் பணி நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டனர். அதில், காணிக்கையாக 3 கோடியே 47 லட்சத்து 56 ஆயிரம் 689 ரூபாய் மற்றும் தங்கம் 104 கிராம், வெள்ளி 2,690 கிராம் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.