வேலூர்: ஏடிஎம் மையத்தில் 10 ஆயிரம் ரூபாய் நூதன முறையில் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சுண்ணாம்புப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தைல வியாபாரி அருண் குமார். இவர், கடந்த 20 ஆம் தேதி அன்று தனது பணத்தை டெபாசிட் செய்ய வேலூர் சாலையில் அமைந்துள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றிருந்தார்.

அப்போது ஏடிஎம் மையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த இரண்டு பேரில் ஒருவர், “என் தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளார், அவசரமாக பணம் தேவை. நீங்கள் டெபாசிட் செய்ய வைத்திருக்கும் பணத்தில் பத்து ஆயிரம் ரூபாய் தாருங்கள், உடனே கூகுள் பே, போன் பே மூலம் அனுப்புகிறேன்” என்று அருண் குமாரிடம் கேட்டுள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் பரிதாபப்பட்ட அருண் குமார், அந்த இளைஞரிடம் ரூ.10,000 பணத்தை கொடுத்துள்ளார். பணம் அனுப்புவது போல் நடித்துக் கொண்டிருந்த அந்த இளைஞர், சில விநாடிகளில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடன் இருந்தவரும் ஓடி விட்டார். இதனையடுத்து அருண் குமார் உடனடியாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கூடுதலாக, வேலூர் சைபர் கிரைம் பிரிவிலும் அவர் புகார் பதிவு செய்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட இருவரையும் அடையாளம் காண தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.