திருநெல்வேலி: கார் ஷோரூமிற்குள் புகுந்து ஊழியரை தாக்கியதுடன் பொருட்களை உடைத்து அடாவடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் பிரபல நிறுவனத்தின் கார் ஷோரூம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் புதிதாக வாங்கப்படும் கார்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து எக்ஸ்சேஞ்ச் ஆக பெறக்கூடிய பழைய கார்களை தனியார் செகண்ட் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராபின்சன் என்பவர் நடத்தி வரும் செகனண்ட் கார் நிறுவனத்திற்கு அந்த பிரபல கார் ஷோரூம் மூலம் எக்ஸ்சேஞ்ச் கார்கள் விற்பனை செய்ய கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருந்த நிலையில் ராபின்சன்னிடம் கார்களை கொடுப்பதை அந்த ஷோரூம் நிறுவனம் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செகனண்ட் கார் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வரும் ராபின்சன் கடந்த 18ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சம்பந்தப்பட்ட தனியார் கார் ஷோரூம் நிறுவனத்திற்குள் புகுந்து ஷோரூம் ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அலுவலகத்திற்குள் புகுந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையில் ராபின்சன் ஷோரூமிற்குள் தகராறு செய்த சிசிடிவி வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கார் ஷோரூம் மேலாளர் சுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன் தகராறில் ஈடுபட்ட ராபின்சன் என்பவரை நேற்று அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.