<p>ஈரோடு: விட்டு விட்டு பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஈரோட்டில் மல்லிகை விலை கிலோ ரூ.6640 ஆக அதிகரித்துள்ளது. </p><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. </p><p>இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் பனிப்பொழிவும் பகல் நேரத்தில் மேக மூட்டமும் காணப்படுகிறது. இதனால் மல்லிகை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், பவானிசாகர், செண்பகபுதூர், தாண்டாம்பாளையம் கெஞ்சனூர் உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்த மல்லிகை மகசூல் கடுமையாக சரிந்துள்ளது. </p><p>இதனால் நேற்று கிலோ ரூ 3 ஆயிரமாக இருந்து 1 கிலோ மல்லிகை இன்று ரூ. 6640 ஆக அதிகரித்துள்ளது. நாளையும் சுபமுகூர்த்த தினம் என்பதால் பூக்கள் தேவை அதிகரிக்கும் என்பதால் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். வரத்து குறைவால் பெங்களூரு, மைசூரு, ஆந்திரா, கேரளா மற்றும் மும்பைக்கு அனுப்பப்படும் பூக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.</p>
