உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே சோலூர் மலைச் சரிவில் பகலில் புலி ஒன்று உலா வரும் வீடியோ வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியில் நிறைந்த மாவட்டமாகும். இந்த வனப் பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை, சருகு மான், கருஞ்சிறுத்தை உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு தாக்கம் அதிகரித்ததால், வனப்பகுதிகளில் உள்ள தாவரங்கள் வறண்டு வருகின்றன. இதனால் உணவு மற்றும் குடிநீருக்காக விலங்குகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைகின்றன.

மேலும் கடந்த வாரம் கூடலூர் பகுதியில் புலி தாக்கியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த புலியை பிடிப்பதற்காக வனத் துறை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி மூன்று இடங்களில் கூண்டுகள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி சோலூர் அருகே பகலில் புலி ஒன்று கம்பீரமாக பாறை மீது நடந்து சென்றது. நீண்ட நேரமாக அப்பகுதியிலேயே உலா வந்த புலி நடந்து செல்லும் காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் சிலர் மறைந்து இருந்து செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்சியை கண்ட அந்த பகுதி மக்கள் மேலும் அச்சம் அடைந்துள்ளனர்.