தருமபுரி: மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி தவெக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது போலீசின் கையை கடித்த தவெக தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகில் சமீப காலமாக சொகுசு வசதியுடன் கூடிய மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மனமகிழ் மன்றம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி அதனை அகற்றக்கோரி தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கிய தவெக மாவட்ட செயலாளர் தாபா சிவா பேசுகையில், ஆட்சிக்கு வரும் முன்பு படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும் என கூறிய திமுக, அதற்கு மாறான அரசு மதுபான கடைகளை அதிகரித்து வருகிறது என்று குற்றம்சாட்டி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென தனியார் மனமகிழ் மன்றத்தை தவெகவினர் முற்றுகையிட்டனர். இதனால் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஒரு இளைஞர் திடீரென ஒரு போலீஸின் கையை கடித்தார். அவர் ஒன்றிரண்டு முறை கடிக்கவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையான போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சமாதானம் அடையாததால் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தவெக தொண்டர் ஒருவர் போலீசின் கையை கடித்த வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.