நீலகிரி: கடும் பனிப்பொழிவு நிலவியதால் நீலகிரி மாவட்டத்தில் புல்வெளிகள், வீடுகளின் கூரைகள் மற்றும் வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் குளிர்காலம் தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. குன்னூர் ஜிம்கானா, லேம்ஸ் ராக், டால்பின் னோஸ், உதகை காந்தல், தலைக்குந்தா, குதிரை பந்தய மைதானம், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவியது. இதனால், புல்வெளிகள், வீடுகளின் கூரைகள் மற்றும் வாகனங்கள் மீது பனி உறைந்து காணப்பட்டது.

குளிர், உறைபனி நிலவினாலும் பார்க்கும் கண்களுக்கு பேரழகாக காட்சியளித்தது. மார்கழி மாதத்தின் புனித தன்மையை நினைவூட்டும் வகையில், இயற்கையே தன் வழிபாட்டை மேற்கொள்வது போல் உதகை முழுவதும் அமைதியும், அழகும் நிறைந்த சூழல் உருவாகியுள்ளது.

இதனை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். குறிப்பாக, அரசு தாவரவியல் பூங்காவில் இன்று காலை மைனஸ் 3.1 டிகிரி செல்சியஸ் (-3.1°C) வெப்ப நிலை பதிவாகி இருந்தது. தென்னிந்தியாவின் மிகவும் குளிர்ந்த மலைப்பிரதேசமாக உதகை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்கும் இதே போன்ற குளிர் நிலை நீடிக்கும். குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும். இதனால், பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் முதியவர்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.