<p>கோயம்புத்தூர்: பொள்ளாச்சி கவி அருவியில் திடீரென காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.</p><p>பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல், காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் தற்போது வரை அதிக அளவில் மழை பெய்து வருகிறது.</p><p>இந்த அதிகனமழை காரணமாக, பிரபல சுற்றுலா தலமான ஆழியார் கவி அருவியில் திடீரென இன்று அதிகாலை முதல் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் நீர் செந்நிறமாக ஆர்ப்பரித்து அதிக சத்தத்துடன் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.</p><p>நீர்வரத்து சீரானதும் சுற்றுலாப் பயணிகள் சென்று குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.</p>
