<p>திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரண்டாவது நாளாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.</p><p>மலைகளின் இளவரசி என அழைக்கபடும் கொடைக்கானலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பகலில் கடும் வெயிலும், மாலையில் கடும் குளிரும், அதிகாலையில் உறை பனியுடன் கூடிய வானிலையும் இருந்து வந்தது. நேற்று காலை முதல் கடும் பனிமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது.</p><p>மேலும், கடும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் குளுமையான வானிலை நிலவி வருகிறது. கடும் பனிமூட்டம் காரணமாக கொடைக்கானல்-பழனி மலைச்சாலை மற்றும் வத்தலகுண்டு பிரதான சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன. </p><p>தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் சாரல் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக மலை கிராமங்களில் விவசாயிகள் தங்களது தோட்ட பணிகளுக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.</p>
