<p>அரியலூர்: கார் ஏசியில் கோளாறு காரணமாக சாலையில் சென்ற போது திடீரென தீ பிடித்தது. இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.</p><p>அரியலூர் மாவட்டம், திருமானூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ராமர் என்பவரது மகன் வாசன் (23). இவர் தனது காரில் சாத்தமங்கலம் கிராமத்திலிருந்து இன்று (டிசம்பர் 20) காலை திருமானூருக்கு ஏலாக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். </p><p>இந்த நிலையில், சத்திரத்தேரி அருகே முனியாண்டவர் கோயில் சாலையில் காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. அப்போது, சுதாரித்துக் கொண்ட வாசன் உடனடியாக காரை நிறுத்தி விட்டு வெளிய வந்து பார்க்கும் போது புகை அதிகமாக வர தொடங்கியது.</p><p>இதைப் பார்த்து அங்கு வந்தவர்கள் திருமானூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து விட்டது. அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீப்பற்றி எரிந்த காரை முழுவதுமாக அணைத்தனர். கார் ஏசியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. </p>
