<p>திருநெல்வேலி: இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்த முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு, திமுக சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.</p><p>பொருநை நதி ஆற்றங்கரை நாகரிகத்தை பறைசாற்றும் விதமாக, திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில், 13.2 ஏக்கர் பரப்பளவில் ரூ.67 கோடி செலவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்து வைக்க, 2 நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.20) நெல்லை வந்துள்ளார்.</p><p>முன்னதாக, சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்து அவர், கார் மூலம் சாலை மார்க்கமாக நெல்லை வந்தார். அப்போது, நெல்லை அரியகுளம் பகுதியில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் மேளதாளம் முழங்க கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிராகம்பெல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கி வரவேற்றார்.</p><p>தொடர்ந்து கேடிசி நகரில் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தலைமையிலான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்த மு.க.ஸ்டாலின், தனது வாகனத்திலிருந்து இறங்கி, பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.</p>
