<p>திருச்சி: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று உற்சவர் பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, நெல்லிக்காய் மாலை, தங்கப்பூண் பவள மாலை, அபயஹஸ்தம் அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.</p><p>108 வைணவ தலங்களில் முதன்மையானது பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிலையில், பகல் பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த ஏகாதசி பெருவிழா, ரங்கநாதர் கோயிலில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.</p><p>நிருமொழித்திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவத்தின் 2-ஆன் நாளான இன்று, உற்சவர் பெருமாள்முத்து பாண்டியன் கொண்டை சாற்றி, மகர கர்ண பத்ரம் அணிந்து, திருமார்பில் - கண்டாபரணம், சந்திர ஹாரம், ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், இரு மார்பிலும் புஜ கீர்த்தி, நெல்லிக்காய் மாலை, தங்கப்பூண் பவள மாலை, வரிசையாக பெரிய சிகப்பு கல் அடுக்கு பதக்கங்கள், 8 வட முத்து மாலை, அபயஹஸ்தம், வெண்பட்டு அணிந்து சேவை வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு வரும் டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.</p>
