<p>திண்டுக்கல்: நின்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>திண்டுக்கல் நகரின் மையத்தில் உள்ள காமராஜர் பேருந்து நிலையம் வட மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் வந்து செல்கின்றன.</p><p>இதற்கிடையே திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போடியில் இருந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி செல்லும் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு தயாராக நின்று இருந்தது. ஒரு சில பயணிகள் அமர்ந்திருந்த நிலையில் பேருந்து ஓட்டுனர் பேருந்தை இயக்க முற்பட்டார். அப்போது திடீரென ஸ்டியரிங் வீலில் புகை சூழ்ந்து தீ பிடித்தது. </p><p>இதில் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் பேருந்து விட்டு கீழே இறங்கி அருகில் இருந்த ஓட்டுநர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் தீயணைப்பு கருவியின் உதவியின் மூலம் உடனடியாக தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்தது அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் பீதியை ஏற்படுத்தியது.</p>
