<p>திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கடையம் அருகே தனியாருக்குச் சொந்தமான விவசாய பண்ணை தோட்டத்தில் பாறைக்குள் உள்ள பதுங்கி இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள ராஜநாகம் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. </p><p>தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோவிந்தபேரி பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்துக்கு சொந்தமான (சோகோ) விவசாய பண்ணை தோட்டத்தில் பாறைக்குள் பெரிய பாம்பு ஓன்று பதுங்கி இருந்ததை காவலர்கள் மற்றும் தோட்ட விவசாயிகள் பார்த்துள்ளனர்.</p><p>உடனடியாக இது குறித்து கடையம் வனத்துறை ரேஞ்சர் கருணாகரன் மூர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் மற்றும் வன காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாறைக்குள் இருந்த ராஜநாகத்தை லாவகமாக பிடித்தனர். </p><p>அப்போது சோகோ தோட்டத்தில் பதுங்கி இருந்தது சுமார் 10 அடிக்கும் மேல் நீளம் உள்ள ராஜநாக பாம்பு என்பது தெரிய வந்தது. தொடர்ந்து கடையம் வனச்சரதிற்குட்பட்ட வாளையார் சரக அடர் வனப்பகுதியில் அந்த ராஜ நாகத்தை வனத்துறையினர் விடுவித்தனர்.</p>
