<p>சென்னை: ஓ.எம்.ஆர் சாலை மத்திய கைலாஷ் சந்திப்பில் 4 திசைகளிலும் ஏறி இறங்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. </p><p>சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அடையார் சர்தார் படேல் சாலையில், மத்திய கைலாஷ் சந்திப்பின் வழியாக மட்டுமே பழைய மாமல்லபுரம் சாலைக்கு செல்ல முடியும். இங்கு அடையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக வாகனங்கள் செல்வதால் பழைய மாமல்லபுரம் செல்லும் வாகனங்கள் காத்திருந்து திரும்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.</p><p>இதனால் இந்த சந்திப்பில் மொத்தம் 60 கோடி ரூபாயில் எல் வடிவ மேம்பாலம் கட்டும் பணிகள் 2023ல் துவங்கின. இப்பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அங்கிருந்த நடை மேம்பாலம் அகற்றப்பட்டது.மேம்பாலம் பணி முடிந்ததும் நடை மேம்பாலம் கட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க கும்டாவிடம் நெடுஞ்சாலைத்துறை கேட்டிருந்தது. இதன்படி முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நகரும்படிகள் மின் தூக்கி வசதியுடன் 20 கோடி ரூபாயில் நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. </p>
