<p>மயிலாடுதுறை: வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.</p><p>புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து சாராயம், மது பாட்டில்கள் உள்ளிட்டவை சட்டத்திற்கு புறம்பாக கடத்தி வரப்பட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>இந்நிலையில், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட கருவாழக்கரையை சேர்ந்த சக்திவேல் என்பவர் வீட்டின் பின்புறம் குடும்பத்தினருடன் இணைந்து சாராயம் விற்பனை செய்வதை போன்று வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.இது தொடர்பாக தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சாராய வியாபாரி சக்திவேலை இரவோடு இரவாக கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
