<p>அரியலூர்: விரைந்து கடன் வழங்க வலியுறுத்தி கீழப்பழூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு இன்று (ஜன 7) காலை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் கீழப்பழுவூர் கல்லூர், வெற்றியூர் உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.</p><p>இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகளுக்கு, இந்த கூட்டுறவு சங்கத்தில் மானிய விலையில் உரம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், விவசாயக் கடனும் வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலகத்தை முட்டுகையிட்டு இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>இதனால் கூட்டுறவு சங்கம் முன்பு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கலைந்து போகச் செய்தனர். </p>
