கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர் காலத்திற்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

பொள்ளாச்சி வன கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை ஆகிய நான்கு வனசரகத்தில் இன்று முதல் ஏழு நாட்கள் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கி நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர், வன உயிரியலாளர் என ஆறு பேர் கொண்ட குழு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் மூன்று நாட்கள் புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளை அதன் காலடி தடம், எச்சம், நக கீறல்கள் போன்றவற்றை வைத்து நேராகவும், மறைந்திருந்தும் கணக்கெடுக்கப்படும்.

அடுத்த மூன்று நாட்கள் மொத்தம் உள்ள நான்கு வனசரகத்திலும் ஊன் உண்ணிகள் பயணிக்கும் மற்றும் இறை விலங்குகள் வாழும் 62 நேர்கோட்டு பாதைகள் தேர்ந்தெடுக்கப்படும். தொடர்ந்து மான், குரங்கு, தாவர உண்ணிகள் போன்றவை கணக்கெடுத்து அவைகள் வாழ தகுதியான புல் போன்ற தாவரங்கள் போதிய அளவில் உள்ளதா உள்ளிட்டவை கண்டறியப்பட்டு பதிவு செய்யப்படும்.

மேலும் ஏழாவது நாள் பிணம்திண்ணி கழுகுகள் உள்ளனவா போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கையை வனத்துறை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என்று வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.