<p>வேலூர்: காட்பாடி நகர் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p><p>தமிழ்நாடு - ஆந்திரா எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக யானைக் கூட்டங்கள் அடிக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து, விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது, வழக்கமாக இருந்து வருகிறது.</p><p>இந்த நிலையில், காட்பாடி இந்திரா நகர் மற்றும் ராஜீவ் காந்தி நகர் அருகே யானைக் கூட்டம் நடமாடுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் காட்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என அறிவுறுத்திய அதிகாரிகள், யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.</p><p>இதனைத் தொடர்ந்து, யானைக் கூட்டங்களை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான முயற்சியில் வனத்துறையினரும், காவல்துறையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
