<p>அரியலூர்: விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை பொதுமக்கள் சாலையில் துரத்திச் சென்று தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. </p><p>அரியலூர்-பெரம்பலூர் புறவழிச்சாலையில் இருந்து, அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலை நோக்கி இன்று சுண்ணாம்பு சுரங்கத்திற்கு சென்ற கனரக லாரி, அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த ராயம்புரம் ஊரைச் சேர்ந்த ரங்கராஜ் மீது மோதியது.</p><p>இதில் காயம் அடைந்து சாலையில் ரங்கராஜ் விழுந்த நிலையில், அவர் வந்த இரு சக்கர வாகனத்தை கனரக லாரி சில மீட்டர் தூரம் இழுத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நின்றது. இதனையடுத்து ஆட்சியர் அலுவலக வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சாலையின் ஓரம் அமர வைத்தனர்.</p><p>இதனிடையே ஓட்டுநர் செல்வத்தை சாலையின் ஓரமாக சென்று லாரியை நிறுத்துமாறு, காவல் துறை அறிவுறுத்தினர். அப்போது வந்த பொதுமக்கள் லாரி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தாக்கவும் தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் காவல் துறையினர் தலையிட்டு ஓட்டுநரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய ரங்கராஜை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.</p>
