<p>அரியலூர்: குப்பை கழிவுகள் கொட்டப்படும் இடத்தை மாற்றக்கோரி கொட்டும் மழையில் சமூக ஆர்வலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>அரியலூர் மாவட்டம் புதுக்குடி ஊராட்சிக்குட்பட்ட களிச்சிக்குழி பகுதியில் செங்குந்தபுரம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி நுண் உரம் தயாரிக்கும் மையம் (நகராட்சி குப்பை கிடங்கு) அமைந்துள்ளது. இது புதுக்குடி கிராம மக்களின் சுகாதாரத்திற்கும், நீர்நிலைகளுக்கும் சீர்கேடு விளைவிக்கும் வகையில் குப்பை கழிவுகளை கொட்டும் இடத்தினை (நுண் உரம் தயாரிக்கும் மையம்) மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதியை சுற்றி உள்ள மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். </p><p>இரும்பினும், அதை அகற்றும் பணி நடைபெறாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், தற்போது அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் வினோத் என்பவர் நுண் உரம் தயாரிக்கும் மையம் முன்பு குப்பை கழிவுகளை கொட்டும் இடத்தினை மாற்றி அமைக்க வேண்டி கொட்டும் மழையில் குடை பிடித்தபடி அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
