<p>காஞ்சிபுரம்: அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் அதிகப்படியான கூட்டம் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><p>தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு கட்சியினர் சார்பில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவை சேர்ந்த ஶ்ரீபெரும்புதூர் நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.</p><p>அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் வருகை தந்து சிறப்புரையாற்றி ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனிடையே பொங்கல் பரிசை பெற பொதுமக்கள் அதிக அளவில் இந்த நிகழ்ச்சிக்கு வந்தனர். இதனால், ஒருவர் ஒருவராக பொதுமக்களை மண்டபத்தில் அனுமதித்து பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனாலும், சிறிது நேரத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்க முயற்சி செய்ததால், சிறிது நேரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p>
