<p>நீலகிரி: கூடலூர் பகுதியில் உலா வந்த காட்டு யானை மீது மின்சாரம் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. </p><p>நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையோரம் வரும் காட்டு யானைகள் வாகனங்களை வழி மறித்து வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். சில சமயங்களில், யானைகள் வாகனங்களை துரத்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் வனப் பகுதியில் உள்ள சாலைகளை கடந்து செல்வதில் கவனமுடன் இருக்க வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் நேற்றிரவு கூடலூர் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குப் பகுதிக்குள் காட்டு யானை ஒன்று உலா வந்தது. அப்போது அங்கிருந்த கடைகளின் கதவை நெருங்கிய போது, அங்கு தொங்கிக் கொண்டிருந்த மின்வயர்கள் யானையின் தும்பிக்கையில் பட்டு மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்குவதை உணர்ந்த யானை உடனடியாக திரும்பி சென்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. </p>
