<p>சென்னை: ஆவடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் ‘சமத்துவ பொங்கல்’ வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.</p><p>தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான பொங்கல் பண்டிகை தை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக, வண்ண வண்ண உடையணிந்து வரும் மாணவிகள் பொங்கல் விழாவை கலர்ஃபுல்லாக கொண்டாடுவர்.</p><p>அந்த வகையில், சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள மகாலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக, தமிழர்களின் பாரம்பரிய உடையான புடவை அணிந்து வந்த மாணவிகள், துறைவாரியாக புது பானையில் பொங்கல் வைத்தனர். அப்போது, ‘பொங்கலோ... பொங்கல்’ கோஷம் விண்ணை முட்டியது.</p><p>அதைத் தொடர்ந்து மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மட்டுமின்றி தப்பாட்டம் இசைக்க மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர். நிறைவாக அம்மனுக்கு பொங்கல் படையல் இட்டு மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் வழிபாடு நடத்தினர்.</p>
