<p>சென்னை: கோயம்பேட்டில் பேருந்து மீது ஏறி கல்லூரி மாணவர்கள் அட்டூழியம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மீது பூந்தமல்லி செல்லக் கூடிய பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணித்த தனியார் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிய படியும், பேருந்தின் மீது ஏறியும், ஜன்னல்களில் அமர்ந்தும் அட்டூழியம் செய்துள்ளனர்.</p><p>தற்போது மாநிலம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வீடு திரும்பிய மாணவர்கள் பேருந்தில் ஏறிப் பாடலை பாடிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். அப்போது, மாணவர்களின் அட்டகாசத்தைத் தாக்க முடியாத பேருந்து ஓட்டுநர் பஸ்ஸை இயக்க முடியாமல், பாதி வழியிலேயே நிறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, பேருந்தின் மேற்கூரையில் சிறிது நேரம் அட்டூழியம் செய்த மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.</p><p>மாணவர்கள் பேருந்து மீது ஏறி அட்டகாசம் செய்யும் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளத்தில் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.</p>
