திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார். இதில் அன்புமணி கலந்து கொள்ளவில்லை.

உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமத்துவப் பொங்கல் விழாக்கள் இன்று கொண்டாடப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக சார்பில் அதன் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அன்புமணி பங்கேற்றிருந்தார். ஆனால், இந்த ஆண்டு அவர் பங்கேற்கவில்லை.

சமத்துவ பொங்கல் விழாவில் ராமதாஸின் மனைவி சரஸ்வதி, மகள் காந்தி, பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி எம்எல்ஏ, ராமதாஸின் பேரன் முகுந்தன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். முன்னதாக சமத்துவ பொங்கல் விழாவை, புதுப்பானையில் புத்தரிசி போட்டு பொங்கல் வைத்து ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

மேலும், சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.