அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ளது பிரகதீஸ்வரர் ஆலயம். வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயிலில் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.

புதுப் பானையில் மஞ்சள் கொத்து கட்டி, செங்கரும்பு தோரணங்களுடன் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு புதுப்பானையில் புத்தரிசி போட்டு, அது பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என கூறி உற்சாகத்துடன் உள்ளூர் மக்களுடன் இணைந்து கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க .சொ.க.கண்ணன், இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக கைத்தறி துண்டு மற்றும் மாலை அணிவித்தார்.

தொடர்ந்து அரியலூர் எம்எல்ஏ சின்னப்பாவும் சுற்றுலாப் பயணிகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கௌரவித்தார். நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.