தேனி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.

தமிழ்நாட்டு மக்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாள், உலக தமிழர்கள் மத்தியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் எழுந்து பொங்கல் வைத்தும், புத்தாடை உடுத்தியும் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

சாதி, மதம் கடந்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, உழவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், பெரியகுளம் அக்ரஹாரம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தனது இல்லத்தில் மகன் ஜெயபிரதீப் மற்றும் மருமகள்கள், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்து வீட்டின் முன்பு பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடினார்.

மேலும் பொங்கல் விழாவிற்கு வந்த தனது உறவினர்கள், நண்பர்கள், கட்சி தொண்டர்களுக்கு பொங்கல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இந்த பொங்கல் நிகழ்வில் ஓபிஎஸ்-இன் மற்றொரு மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், " தை பிறந்தால் வழிபிறக்கும்" எனத் தெரிவித்தார்.