<p>தஞ்சாவூர்: சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.</p><p>தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூரில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிய வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தஞ்சையில் உள்ள ஜோதி தொண்டு நிறுவனம் மூலம் இன்று திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.</p><p>இந்நிலையில் திருவள்ளுவர் தினமான இன்று (ஜன16) தஞ்சையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் நூதன முறையில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹெல்மெட் போடாமல் வந்தவர்களை வரிசையாக நிறுத்தி, முறைப்படி உங்கள் மேல கேஸ் போடனும், ஆனா கேஸ் போடாம அல்வா கொடுக்கிறோம். நீங்கள் ஹெல்மெட் போட்டு ஓட்டினா எமனுக்கே நீங்கள் அல்வா கொடுக்கலாம் என பஞ்ச் டயலாக் பேசி, திருவள்ளுவர் வேடம் அணிந்து வந்த சிறுவனை விட்டு அல்வாவுடன் திருக்குறள் புத்தகம் வழங்க வைத்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினார். இந்த விழிப்புணர்வு நிகழ்வு தஞ்சையில் பலராலும் பாராட்டப்படுகிறது.</p>
