<p>தூத்துக்குடி: தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில், தமிழ் பாரம்பரிய கலாச்சார முறையில் குதிரை வண்டியில் 100 வகையான சீர்வரிசையோடு தாய் மாமன்கள் வருகை தந்து ஊரையே வியப்பிற்குள்ளாக்கியுள்ளனர்.</p><p>தென் மாவட்டங்களில் தாய்மாமன் சீர்வரிசை மிகவும் பிரபலமாகும். தற்போது இந்த தாய்மாமன் சீர்வரிசை கிராமப்புறங்களில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த இனிய இசக்கி என்பவரது மகள் மஞ்சள் நீராட்டு விழா நேற்று தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் நடைபெற்றது. </p><p>இதில் அண்ணா நகர் பகுதியில் பிரம்மிக்கத் தக்க வகையில் தனது தங்கை மகளுக்கு தாய் மாமன் சீர்வரிசையாக முத்து மற்றும் வேல்முருகன் ஆகிய தாய் மாமன்கள் 10 பவுன் நகை மற்றும் பட்டுப் புடவை, பழங்கள், இனிப்பு வகைகள், வெள்ளி பாத்திரங்கள் உள்ளிட்ட 100 வகையான சீர்வரிசை தட்டுக்கள் விருந்துக்காக ஆட்டுக்கிடாய் மற்றும் நையாண்டி மேளம், செண்டை மேளம் உள்ளிட்ட மேளதாளங்கள் முழங்க கொண்டு வந்தனர். </p><p>விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட குதிரைகள் பூட்டிய சேரட் வண்டிகள், தங்கை மகளை வீட்டிலிருந்து அழைத்துச் மண்டபம் வரை ஊர்வலமாக அழைத்து சென்று தாய்மாமன் சீர்வரிசையை பிரம்மாண்டமாக செய்தனர். இந்த தாய்மாமன் சீர்வரிசையை கிராமப்புறங்களில் செய்வது போன்று நகர்ப்புறங்களிலும் பொதுமக்கள் செய்தால் உறவுகள் மேம்படும் என சீர்வரிசை செய்த தாய் மாமன்கள் தெரிவித்தனர். </p>
