<p>திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது </p><p>அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலில் உள்ள அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை தேரோட்டம், பூச்சொரிதல் விழா, தைப்பூச திருவிழா ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.</p><p>அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலையில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் கோயில் இணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திருக்கோயில் விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் இளங்கோவன், இணை ஆணையர் சூரிய நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p>
