<p>உதகை: நீலகிரியில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. </p><p>நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, உதகை போன்ற பகுதிகளில் நேற்று இரவு தொடர் கனமழை பெய்ததால பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, குன்னூர் பகுதியில் நேற்று இரவு அதிகபட்ச அளவான 115 மிமீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பேரிடர் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி வருகிறார்கள். இதே போன்று நகராட்சி பணியாளர்களும் சாலையில் விழுந்த மண் சரிவு மற்றும் பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.</p><p>இதே போன்று குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் ரன்னிமேடு பகுதியில் நிறுத்தப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட இடங்களை 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் சீரமைத்தனர். இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து இரண்டு மணி நேரம் தாமதமாக மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.</p>
